;

திரிபோஷா பெற காத்திருந்த மக்கள் மீது செல் தாக்குதல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னியிலுள்ள பகுதிகள் அனைத்தும் ஸ்ரீலங்கா இராணுவ வசமானதைத் தொடர்ந்தும் 2009.04.08 ஆம் திகதி இன்று காலை 7.30 மணியளவில் அம்பலவன்பொக்கணை எனும் பிரதேசத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் திரிபோஷா மற்றும் குழந்தைகளுக்கான பால்மா பெறுவதற்குக் காத்திருந்த 500 பேருக்கும் மேற்பட்ட மக்கள் குழாத்தின் மீது 5 செல்கள் வீழ்ந்து வெடித்தது.

இச் சம்பவதில் 8 பேர் கொல்லப்பட்டதுடன் 53 பேர் பலத்த காயங்களுக்கும் உள்ளாகினர். இவ்வேளை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அருகிலிருந்த வீடுகளில் வீழ்ந்த செல்லினால் 5 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

பின்னர் இந்தப் பகுதியில் காலை 11 மணியளவிலும் பல செல்கள் வீழ்ந்து வெடித்தன, இன்று வீழ்ந்து வெடித்த செல்களினால் 283 பொது மக்கள் காயத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இச் சம்பவத்தில் கொல்லப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்ட 22 பேரின் உடலங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் அடக்கம் செய்வதற்காக வைத்தியசாலையில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

வைத்தியசாலைப் பகுதி மீது வீசப்பட்ட செல் வீச்சில் 100 பேருக்கும் மேற்பட்ட பொது மக்கள் இறந்திருக்கலாமென கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.