;

புதுமாத்தளன் யுத்தசூனியப் பிரதேசத்தில் தொடர் செல் தாக்குதல்

யுத்த சூனியப் பிரதேசமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவின் புதுமாத்தளன் வைத்தியசாலையின் அருகான பகுதியெங்கும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் வீசப்படும் செல் வீழ்ந்து வெடித்துக் கொண்டே இருப்பதாகவும் அத்துடன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களும் தீர்க்கப்படுவதாக வைத்திய அதிகாரி வரதராஜா தெரிவித்தார்.

2009.04.09 ஆம் திகதியான இன்று மாலை 4 மணி வரை வைத்தியசாலை பதிவுப் புத்தகத்தில் பதியப்பட்ட தகவலின்படி 272 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் காயப்பட்டவர்கள் மக்களால் அழைத்து வரப்படுவதாகவும், 35 பேரின் இறந்த உடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பத்துக்கும் அதிகமான சிறுவர்களின் உடலங்கள் அடங்குவதாகவும், பிற்பகல் 4 மணியளவில் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் வரதராஜாவின் அலுவலக கூரை மீதும் செல் வீழ்ந்து வெடித்ததாகவும் அறிய முடிகின்றது.

செல்வீச்சும், துப்பாக்கி வேட்டும் தொடர்ந்து மக்களைத் தாக்கிக் கொண்டே வருவதனால், தெருக்கள் வெறிச்சோடிக் காணப்படுவதாகவும், மக்கள் நிலப் பதுங்குகுழிக்குள்ளே பதுங்கியுள்ளதாகவும், செல் வீச்சில் சிக்குண்டு இறக்கும் மக்களின் உடலங்கள் தெருக்களில் காணப்படுவதாகவும் அறிய முடிகின்றது, இறந்தவர்களின் எண்ணிக்கை 100 பேருக்கும் அதிகமாக இருக்கலாமென டாக்டர் வரதராஜா தெரிவித்தார்.